ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கருத்துக்கள் “தேவையற்றவை மற்றும் வேடிக்கையானவை” எனப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.

புனித ரமலான் மாதத்தில், ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இது ஒரு “பொறுப்பற்ற செயல்” என இந்தியா விமர்சித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்துப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஹுசைன் அந்த்ராபி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:,

“ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே பாகிஸ்தான் இலக்கு வைத்தது. இது பாகிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கை. இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க இந்தியாவிற்கு எந்த உரிமையும் இல்லை. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் இந்தியாவின் வரலாறே மோசமாக இருக்கும்போது, அவர்களின் விமர்சனத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள முடியாது.”

மேலும், ஆப்கானிஸ்தான் மண்ணில் செயல்படும் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாகவும், அந்த முகாம்கள் அழிக்கப்பட்டதால் இந்தியா ஏமாற்றமடைந்து இத்தகைய கருத்துக்களைக் கூறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தங்களது அறிக்கையில் காஷ்மீர் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்தும் பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார். “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை இந்தியா மீறி வருகிறது. தண்ணீரை ஒரு ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. இந்தியாவின் இத்தகைய செயல்பாடுகள் பிராந்திய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “ரமலான் போன்ற ஒரு புனித மாதத்தில், அண்டை நாட்டின் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது அப்பட்டமான அத்துமீறல்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தத் தொடர் வார்த்தைப் போரினால், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கனவே நிலவி வரும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.