காலங்காலமாக உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சார மற்றும் சமூக நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றில் பல ‘அடையாளம்’ மற்றும் ‘கௌரவம்’ என்ற பெயரில் பெண்களின் உடல்நலத்தையும், மனநலத்தையும் சிதைப்பதாகவே அமைந்துள்ளன. இன்றும் உலகின் சில பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் இத்தகைய வேதனைமிகுந்த பழக்கவழக்கங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

அதாவது கேமரூன், நைஜீரியா, டோகோ மற்றும் சாட் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் இந்தப் பழக்கம் நிலவுகிறது. வளரிளம் பெண்களின் மார்பக வளர்ச்சியைத் தடுத்து, ஆண்களின் கவனத்தை ஈர்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சூடான கற்கள் அல்லது இரும்புப் பொருட்களைக் கொண்டு மார்பகங்கள் அழுத்தப்படுகின்றன. அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், 58 சதவீத சம்பவங்களில் தாயே தன் மகளுக்கு இந்த வலியை இழைக்கிறார். இது பெண்களுக்குத் தீராத உடல் உபாதைகளையும், புற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

மியான்மர் மற்றும் வடக்கு தாய்லாந்தின் ‘காயன்’ (Kayan) இன மக்களிடையே, பெண்களின் நீண்ட கழுத்து அழகின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதற்காக, சிறுமிகளுக்கு 5 வயதிலிருந்தே கழுத்தில் பித்தளை வளையங்கள் போடப்படுகின்றன. வயது கூடக் கூட வளையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதனால் கழுத்து எலும்புகள் அழுத்தம் பெற்று, தோள்பட்டை எலும்புகள் கீழ்நோக்கி இறங்குகின்றன. இது கழுத்தை நீளமாகக் காட்டினாலும், அந்த வளையங்களை அகற்றினால் கழுத்து எலும்புகளால் உடலைத் தாங்க முடியாத நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பெண் உறுப்பை சிதைக்கிறார்கள். இது “தூய்மை’ என்ற பெயரில் செய்யப்படுகிறது. மருத்துவக் காரணங்கள் ஏதுமின்றி செய்யப்படும் இந்தச் சிதைவு, பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாறாத வடுக்களையும், கடுமையான பிரசவ காலச் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. இது மனித உரிமை மீறலாகப் பார்க்கப்பட்டாலும், பல சமூகங்களில் இது திருமணத்திற்கான தகுதியாக இன்றும் கருதப்படுகிறது.

ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இனங்களில், கணவனை இழந்த பெண்கள் ‘சுத்திகரிப்பு’ என்ற பெயரில் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கணவனின் சொத்துக்களில் இருந்து விரட்டப்படுவது அல்லது கணவனின் உறவினர்களையே திருமணம் செய்ய வற்புறுத்தப்படுவது போன்ற நடைமுறைகள் இன்றும் தொடர்கின்றன. இது எச்.ஐ.வி (HIV) போன்ற கொடிய நோய்கள் பரவுவதற்கும் காரணமாகிறது.

மேலும் நாகரிகம் வளர்ந்த இந்த 2026-ஆம் ஆண்டிலும், கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறைகள் தொடர்வது வேதனைக்குரியது. இத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பன்னாட்டு அமைப்புகள் குரல் கொடுத்து வந்தாலும், அடிமட்ட அளவில் விழிப்புணர்வு ஏற்படுவதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும்.