மெக்சிகோவின் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனான ‘எல் மென்சோ’, சுமார் 19 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினரின் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இறுதியில் தனது காதலியால் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் என்ற சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவனான இவரைப் பிடிக்க அமெரிக்க மற்றும் மெக்சிகோ உளவு அமைப்புகள் தீவிரமாக முயன்று வந்தன. தொழில்நுட்ப கண்காணிப்புகளைத் தவிர்க்க காடுகளிலும் மலைகளிலும் மறைந்து வாழ்ந்த மென்சோ, தனது காதலியுடன் ரகசியமாகத் தொடர்பு கொண்டதே அவருக்கு வினையாக முடிந்தது.

மேலும் உளவுத்துறையினர் எல் மென்சோவின் காதலியைக் கண்காணித்தபோது, அவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரகசிய இடங்களுக்குச் செல்வதை உறுதி செய்தனர். அந்தத் தடயங்களைப் பின்தொடர்ந்து சென்ற பாதுகாப்புப் படையினர், துல்லியமான திட்டமிடலுடன் அவர் மறைந்திருந்த பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

இந்நிலையில் நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களால் பிடிக்க முடியாத ஒரு குற்றவாளி, ஒரு சிறு உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிடிபட்டது சர்வதேச அளவில் முக்கியச் செய்தியாக மாறியுள்ளது. இதன் மூலம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த ஒரு தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.