“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதற்கு ஏற்ப, ஓட்டப்பந்தயத்தில் அதீத தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியைத் தவறவிட்ட பாகிஸ்தான் இளைஞரின் வீடியோ தற்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் ஓட்டப்பந்தயம் ஒன்றில் வீரர்கள் வரிசையாகத் தயாராக நின்றனர். போட்டி தொடங்கியவுடன், துப்பாக்கி குண்டு பாய்வதைப் போல வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். அதில் ஒரு வாலிபர் மட்டும் மற்ற வீரர்களை விடப் பல அடி தூரம் முன்னால் சென்று, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
வெற்றி உறுதி என்று தெரிந்தவுடன், அவருக்குள் அதீத தன்னம்பிக்கை தலைதூக்கியது. தான் எவ்வளவு தூரம் முன்னால் இருக்கிறோம் என்பதைப் பார்க்கவும், தனது வேகத்தை மற்றவர்களுக்குப் பறைசாற்றவும் அந்த வாலிபர் ஓடிக்கொண்டிருக்கும் போதே பின்னால் திரும்பிப் பார்த்தார்.
பின்னால் திரும்பிப் பார்த்த அந்த நொடியில் தனது சமநிலையை இழந்த அவர், எதிர்பாராத விதமாகப் பாதையிலேயே நிலைதடுமாறி விழுந்தார். அவர் சுதாரித்து எழுவதற்குள், அவருக்குப் பின்னால் வந்த மற்ற வீரர்கள் மின்னல் வேகத்தில் அவரைக் கடந்து சென்றனர்.
View this post on Instagram
பதற்றமடைந்த அந்த இளைஞர், மீண்டும் எழுந்து பைத்தியம் பிடித்தது போல ஓடினார். இருப்பினும், அதற்குள் மற்ற இரு வீரர்கள் இலக்கைத் தொட்டு வெற்றிக்கோட்டை எட்டியிருந்தனர். தோல்வியின் விரக்தியில் வேகமாக ஓட முயன்ற அவர், மீண்டும் ஒருமுறை தடுமாறி விழுந்தது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே 1.6 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “தம்பி, நீ இன்னும் கொஞ்சம் ஸ்டைல் காட்டியிருக்கலாம்!” என்றும், “அதீத தன்னம்பிக்கை ஆபத்தானது என்பதற்கு இதுவே சாட்சி” என்றும் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
