இன்றைய இளைஞர்களின் கனவு வாகனமாகத் திகழும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யமஹா R15 ஸ்போர்ட்ஸ் பைக்கை, ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் பழைய இரும்புப் பொருட்களை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டியாக மாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வழக்கமாகப் பழைய ஸ்கூட்டர்களில் இது போன்ற தள்ளுவண்டிகளை இணைத்து பார்த்திருப்போம், ஆனால் அதிவேகமாகச் செல்லக்கூடிய ரேசிங் பைக்கை இப்படி ‘தேசி ஜுகாட்’ முறையில் சரக்கு வாகனமாக மாற்றியிருப்பது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

அந்தப் பெண் அந்தப் பைக்கின் பின்னால் ஒரு பெரிய இரும்புத் தள்ளுவண்டியை இணைத்து அசால்ட்டாக ஓட்டிச் செல்லும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சாலையில் சென்ற இளைஞர்கள் சிலர் இந்த விசித்திரமான வாகனத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அந்தப் பெண்ணை நிறுத்தி விசாரித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுமே நெட்டிசன்கள் பலவிதமான கமெண்டுகளைத் தட்டி விடுகின்றனர்.

“>

 

“இந்த வித்தைக்கு முன்னாடி ஒரு பிக்கப் டிரக் கூட ஒண்ணுமே இல்ல” என்றும், “யமஹா கம்பெனிக்காரன் இதைப் பார்த்தா அழுதுருவான்” என்றும் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

ஆடம்பரமான ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை இப்படி உழைப்பிற்கான வாகனமாக மாற்றிய அந்தப் பெண்ணின் ஐடியா, தற்போது இணையத்தில் ஒரு சிரிப்பலையையே உண்டாக்கியுள்ளது.