ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் உள்ள புகழ்பெற்ற சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று மாலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் மிக முக்கியமான பிரிவான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவில் திடீரென தீப்பிடித்தது. தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் அருகில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதி முழுவதும் ‘ஹை அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்த சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைக்கத் திட்டமிட்டிருந்தார்.
பிரதமரின் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் உடனடியாகத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, பிரதமர் மோடி உரையாற்றவிருந்த பொதுக்கூட்ட மேடை விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அந்த இடம் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த விபத்தின் தீவிரம் காரணமாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா விரைவில் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தீ விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
ஊழியர்கள் அனைவரும் சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை நடைபெறவிருந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்த விபத்து மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
