“திமுகவைத் தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சியாகவே இருக்கும்” என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு, “டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்; ரயில் வேண்டுமென்றால் டெல்லியிடம் தானே கேட்க முடியும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளாரர்.
திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்திய போராட்டத்தில், அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது ஆசிரியர்களிடையே உரையாற்றிய திண்டுக்கல் சீனிவாசன், தனது வழக்கமான பாணியில் கிண்டலாகப் பேசினார். அங்கிருந்த ஒரு ஆசிரியையைப் பார்த்து, “சகோதரி… மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். மற்றபடி எல்லாத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இவரின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலைகளையும், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “தமிழகத்தில் திமுகவைத் தவிர மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் அது டெல்லி ஆட்சியாகத்தான் இருக்கும்” என முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு மாநிலத்திற்குப் பத்து ரயில்கள் தேவைப்பட்டால், அதனை டெல்லியிடம் (மத்திய அரசு) தானே கேட்க முடியும்? வேறு யாரிடம் கேட்க முடியும்?” “மாநில அரசாங்கம் என்பது மத்திய அரசாங்கத்திடம் கேட்டுத்தான் திட்டங்களைப் பெற வேண்டும். அதுதான் நடைமுறை” என்று விளக்கமளித்தார்.
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த வெளிப்படையான பேச்சு, தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவு குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
