இந்தியாவைச் சேர்ந்த 62 வயதான தேபாஷிஸ் கோஷ் என்பவர், 2012-ம் ஆண்டு வாங்கிய அமெரிக்கக் குடியுரிமையை இப்போது இழக்கும் அபாயத்தில் உள்ளார். அவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பே, விமான வசதி தொடர்பான திட்டத்திற்காக முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை மோசடி செய்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
குடியுரிமை விண்ணப்பத்தின் போது தனது குற்றப்பின்னணியை மறைத்து, உண்மைகளைத் தவறாகக் கூறி அவர் அமெரிக்கக் குடிமகனாக மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோஷ் உட்பட மொத்தம் 12 பேர் மீது பயங்கரவாதம், பாலியல் குற்றங்கள்மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற கடுமையான புகார்கள் சுமத்தப்பட்டு, அவர்களின் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தொடங்கியுள்ளது.
அமெரிக்க சட்டத்தின்படி, தவறான தகவல்களைக் கொடுத்தோ அல்லது உண்மைகளை மறைத்தோ பெறப்படும் குடியுரிமை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் நிர்வாகத்தின் தலைமை வழக்கறிஞர் டாட் பிளான்ச், “மோசடி மற்றும் பயங்கரவாதம் போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக இருக்க தகுதியற்றவர்கள்” என்று எச்சரித்துள்ளார்.
சட்டவிரோதமாகக் குடியுரிமை பெறுபவர்களைக் கண்டறிய அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தப் போவதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த தேபாஷிஸ் கோஷின் குடியுரிமை தற்போது பறிபோகும் நிலையில் உள்ளது.
