ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தனது பைக்கை சர்வீஸ் செய்துவிட்டு வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். அந்தப் பைக்கின் எஞ்சின் சரியாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, இரவு முழுவதும் பைக்கை ‘ஆன்’ செய்தே வைக்குமாறு மெக்கானிக் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். மெக்கானிக் சொன்னதை அப்படியே நம்பிய முரளி, தனது வீட்டின் கீழ்த்தளத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்த நிலையிலேயே நிறுத்தி வைத்துள்ளார். அந்த அறையிலேயே முரளியின் 15 வயது மகன், 7 வயதே ஆன அவரது இரட்டைப் பெண் குழந்தைகள் மற்றும் முரளியின் 75 வயது தந்தை என நால்வரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.
இரவு முழுவதும் பைக் ஓடிக்கொண்டிருந்ததால் அதிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) போன்ற நச்சுப் புகை அந்த அறை முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தூக்கத்திலேயே அந்த நச்சுப் புகையைச் சுவாசித்த நான்கு பேரும் மூச்சுத் திணறிப் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டின் முதல் தளத்தில் முரளியும் அவரது மனைவியும் தூங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காலையில் எழுந்து பார்த்தபோது தனது பிள்ளைகளும் தந்தையும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு முரளி கதறித் துடித்தது காண்போரை நெஞ்சை உருக வைத்துள்ளது. ஒரு சிறிய கவனக்குறைவு மற்றும் தவறான வழிகாட்டுதல் ஒரு குடும்பத்தையே சிதைத்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
