இன்ஸ்டாகிராம் தளத்தில் பயனர்களின் உரையாடல்களுக்குப் பாதுகாப்பளிக்கும் ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ வசதியை மே 8, 2026 முதல் நீக்க உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, குறுஞ்செய்திகளை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாராலும் இன்ஸ்டாகிராம் உட்பட படிக்க முடியாதவாறு பாதுகாப்பை வழங்கியது.
மேலும் தற்போது மிகக் குறைவான பயனர்களே இந்த வசதியைப் பயன்படுத்துவதாலும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் உள்ள சிக்கல்களாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த மாற்றத்தால் பயனர்களின் தனியுரிமை பெருமளவில் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்த அம்சம் நீக்கப்பட்ட பிறகு, நேரடிச் செய்திகளில் பகிரப்படும் தகவல்களைத் தொழில்நுட்ப ரீதியாக மெட்டா நிறுவனத்தால் அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களின் முக்கிய உரையாடல்களைப் பாதுகாக்க விரும்புவோர், இந்தத் தேதிக்கு முன்னதாகவே சாட் தரவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்க்ரிப்ஷன் வசதி தேவைப்படும் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
