இந்திய ராணுவத்தின் பெருமைக்குரிய அடையாளமாகவும், 1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரில் தனது அசாத்தியத் துணிச்சலால் எதிரிகளை நிலைகுலையச் செய்த ‘மக்கள் நாயகன்’ ஓய்வுபெற்ற பிரிகேடியர் VR சுவாமிநாதன் (94) இன்று கோவையில் காலமானார். இந்திய ராணுவத்தில் பல தசாப்தங்களாகப் பணியாற்றிய இவர், வெறும் வீரராக மட்டுமல்லாமல், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து தேசத்தைப் பாதுகாப்பதில் முன்னின்று உழைத்தவர். இவரது மறைவுச் செய்தி கேட்டு ராணுவ வட்டாரங்களும், பொதுமக்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வெறுமனே 1971 போர் மட்டுமல்லாது, 1962 கோவா விடுதலைப் போர், 1965 நாகாலாந்து கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கை என இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றுத் தருணங்களில் இவரது பங்களிப்பு அளப்பரியது. முதுமை காரணமாக இயற்கை எய்திய இவரது உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒரு மாபெரும் வீரனின் மறைவு, இந்திய ராணுவ வரலாற்றில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது. #RIP
