பீகார் மாநிலத்தின் மோதிஹாரி எல்லைப் பகுதியில் நேபாளம் வழியாக எவ்வித முறையான விசா மற்றும் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் மற்றும் மியான்மர் வாலிபர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (SSB) அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் எல்லையோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் ரக்ஸால் பகுதியில் உள்ள கஸ்டம்ஸ் சவுக் அருகே சில வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழையத் திட்டமிட்டிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜூனிலா பெக் ஸ்ரேஸ்தா என்ற பெண் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஆங் நிங் லிங் லேட் என்ற வாலிபரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்களிடம் இந்தியாவிற்குள் நுழைவதற்கோ அல்லது தங்குவதற்கோ தேவையான எந்தவொரு சட்டப்பூர்வமான ஆவணங்களும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தியா – நேபாள எல்லைப் பகுதி திறந்தவெளியாக இருப்பதால், இவர்கள் இருவரின் பின்னணி என்ன, எதற்காகப் பீகாருக்குள் நுழைய முயன்றார்கள் மற்றும் யாருடைய உதவியுடன் இந்த ஊடுருவல் முயற்சி நடைபெற்றது என்பது குறித்து உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருவதால் இந்த விவகாரம் சோசியல் மீடியாக்களில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
