தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

“தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர் என்றாலும், அவரது ஆட்சியின் செயல்பாடுகளைப் பற்றி அதேபோல் சொல்ல முடியாது. அரசு, இஸ்லாமியர்களுடன் அங்காளி பங்காளியாக  பழகுகிறது; ஆனால் நாங்கள் இஸ்லாமியர்களுடன் மாமன்–மச்சான் உறவில் நீண்டநாள் தொடர்புடன் இருக்கிறோம்,” என்றார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அவர், “நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பதிலாக 144 தடை உத்தரவு பிறப்பித்தது, கோர்ட்டை அவமதிப்பது போன்றதாகும். தீபம் ஏற்றுவதால் எந்த இஸ்லாமிய சமூகத்திற்கும் பாதிப்பு அல்லது வருத்தம் இல்லை,” என்றும் தெரிவித்தார்.

மேலும், “தீபாவளிக்குப் பின் பெரும்பான்மையான மக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடும் சூழலில், மக்களின் உணர்வுகளை மதிக்காமல், 2026 தேர்தலை முன்னிட்டு இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாகக் கருதி முதல்வர் அரசியல் செய்கிறார்,” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.