மனைவியின் பெயரில் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அவரது நகைகள் மற்றும் காரை அபகரித்துக் கொண்டு கணவன் தலைமறைவான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனைவி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது அழகைக் கண்டு மயங்கியதாகக் கூறும் கணவர், திருமணத்திற்குப் பிறகு அசல் முகத்தைக் காட்டியுள்ளார்.

மேலும் மனைவியின் பெயரில் நிலம் வாங்குவதாகக் கூறி சுமார் 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடனைப் பெற்று அதைத் தனது சொந்தத் தேவைக்காகச் செலவு செய்ததோடு, அவரைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் மனைவியின் கார் மற்றும் விலையுயர்ந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற அவர், அதன்பின்னர் மனைவியிடமே ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தை நாடியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இத்தனை மோசடிகளையும் செய்த பிறகு, மனைவியே தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அவர் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது.

விசாரணையின் முடிவில், கணவரின் மோசடி நடவடிக்கைகளை உறுதி செய்த நீதிமன்றம், அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்ததோடு, மாறாக மனைவியின் வாழ்வாதாரத்திற்காக அந்த நபர் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.