மனைவி தன் கணவனை ‘ஆண்மையற்றவர்’ என்று கூறுவது, அதற்குரிய மருத்துவ ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அது அவதூறு சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஒரு பெண்ணுக்கு எதிராகக் கீழ் நீதிமன்றம் அனுப்பிய சம்மனையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதி அச்சல சச்தேவ் அமர்வு வழங்கிய தீர்ப்பின் விவரமாவது,
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு கடந்த 2022 நவம்பர் 25 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின், தனது கணவனின் மருத்துவக் குறைபாடு காரணமாக தங்களுக்குள் தாம்பத்திய உறவு நடக்கவில்லை என்று கூறி, கடந்த 2024-இல் அந்தப் பெண் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக் கொடுமை வழக்குகளைத் தொடர்ந்தார்.
இதற்குப் பதிலடியாக, தனது மனைவி தன்னை ‘ஆண்மையற்றவர்’ எனக் கூறி சமுதாயத்தில் தனது பெயரைக் கெடுத்துவிட்டதாகக் கூறி, கணவன் தரப்பில் கோரக்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், கடந்த 2024 டிசம்பர் 21 அன்று மனைவிக்கு சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து அந்தப் பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அச்சல சச்தேவ், கீழ் நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது, எந்தவொரு மருத்துவ ஆதாரமும் இல்லாமல் ஒருவரைப் பகிரங்கமாக ஆண்மையற்றவர் என்று கூறுவது அவதூறாகக் கருதப்படலாம். ஆனால், அதே குற்றச்சாட்டு முறையான மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் ஆதாரத்துடன், நல்லெண்ண அடிப்படையில், ஒரு சட்டப்பூர்வமான புகாரின் பகுதியாக தகுதியுள்ள அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும் போது, அது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 499-இன் கீழ் அவதூறு குற்றத்திலிருந்து விலக்கு பெறுகிறது.
இந்த வழக்கில், பெண்ணின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அவரது கணவனின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை உள்ளது. எனவே, மனைவி தன் மீதான வரதட்சணை உள்ளிட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகவே கணவன் இந்த அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், முறையான மருத்துவ ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், தாம்பத்திய உறவு சாத்தியப்படாததை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெண் விவாகரத்து கோரவும் சட்டத்தில் இடமுண்டு” என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
