ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், வெயிலின் தாக்கம் காரணமாகப் பூட்டப்பட்ட காரின் உள்ளே வெப்பநிலை 53 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததில், காரில் சிக்கிய 8 மற்றும் 5 வயதுடைய இரு சிறுமிகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் மற்றும் உள்ளூர் மக்கள் தரப்பில் கூறப்படுவதாவது, குடன்புரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால், தனது மகள்களான டினா (8), லட்சுமி (5) ஆகிய இருவரையும் அவரே வளர்த்து வந்தார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரமேஷ், அருகில் உள்ள சலூனில் வேலை பார்த்து வருகிறார். அவர் வேலைக்குச் சென்ற நேரத்தில், சிறுமிகள் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, அங்குள்ள பழுதுபார்க்கும் கேரேஜ் அருகே இன்ஜின் கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு பழைய காரின் உள்ளே சிறுமிகள் இருவரும் விளையாடுவதற்காக ஏறியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவுகள் தானாகப் பூட்டிக்கொண்டதால், அவர்களால் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். நேற்று வெளி வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகக் கொளுத்தியுள்ளது. இந்நிலையில், கார் முழுமையாக மூடப்பட்டிருந்ததால், பசுமைக்குடில் விளைவு  காரணமாக வெறும் 30 நிமிடங்களில் காரின் உட்புற வெப்பநிலை 53 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது.

 

 

நீண்ட நேரமாக காரின் உள்ளே காற்றோட்டமின்றி, கடுமையான வெப்பத்தால் சிறுமிகள் இருவரும் மயக்கமடைந்துள்ளனர். கேரேஜ் ஊழியர் ஒருவர் காரின் உள்ளே சிறுமிகள் அசைவின்றிக் கிடப்பதைக் கண்டு அலறியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காரின் கதவை உடைத்து அவர்களை மீட்டனர். இதுகுறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “காரின் கதவைத் திறந்தவுடன் உள்ளிருந்து நெருப்புக் காற்று வீசியது. கடுமையான வெப்பத்தால் சிறுமிகளின் கை, கால்கள் சுருண்டு போயிருந்தன. உடலில் நெருப்புப் பட்டது போல தோல் முழுவதும் தீய்ந்து போயிருந்தது. தண்ணீரை ஊற்றியும் அவர்களது உடலின் சூடு தணியவில்லை. உடனே சிறுமிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், கோடைக் காலத்தில் வெயிலில் நிறுத்தப்படும் கார்களின் உள்ளே வெப்பநிலை மிக வேகமாக, வெளியில் இருப்பதை விட 10 முதல் 20 டிகிரி வரை அதிகரிக்கும். எனவே, பொதுமக்கள் தங்களது வாகனங்களைப் பூட்டி வைக்க வேண்டும் என்றும், குழந்தைகள் விளையாட்டாகக் கூட காரின் உள்ளே செல்வதைத் தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.