ஆன்லைன் ஆர்டர் டெலிவரி செய்ய வந்த ஊழியர் ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து விளையாடி, அதனை நெகிழ்ச்சியுடன் முத்தமிட்ட சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “கனவுக்கும் நிஜத்திற்கும் இடையே வாழ்க்கை குறுக்கிடும்போது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விவரமாவது, ‘பிளின்கிட்’ நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், ஒரு வீட்டின் வாசலில் ஆர்டரை டெலிவரி செய்யச் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டின் வரவேற்புப் பகுதியில் ஒரு கிரிக்கெட் பேட் வைக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்துள்ளார்.

சுற்றுமுற்றும் பார்த்த அந்த ஊழியர், ஆசையோடு அந்த பேட்டை கையில் எடுத்து, கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுவது போல சில ஷாட்டுகளை அடித்து மகிழ்ந்தார். பின்னர், அந்த பேட்டை பிரிய மனமின்றி அன்போடு முத்தமிட்டு, மீண்டும் இருந்த இடத்திலேயே பத்திரமாக வைத்துவிட்டு தனது அடுத்த வேலைக்குத் திரும்பினார். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த சுருக்கமான, ஆனால் உணர்வுபூர்வமான காட்சி சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

இந்த வீடியோவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, “கனவுக்கும் நிஜத்திற்கும் இடையே வாழ்க்கை குறுக்கிடும்போது இப்படித்தான்” என்று மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் இதயத்தைத் தொட்டுள்ளது. “இந்த ஊழியர் ஒரு காலத்தில் தொழில்முறை கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம், ஆனால் குடும்பச் சூழ்நிலை அவரை டெலிவரி வேலைக்குத் தள்ளியிருக்கலாம்” என்றும், “இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, அது வாழ்நாள் முழுதும் தொடரும் ஒரு உன்னதமான உணர்வு” என்றும் இணையவாசிகள் தங்களது கருத்துக்களை உருக்கமாகப் பகிர்ந்து வருகின்றனர்.