நெல்லை மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாகச் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நேற்று பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த அவர், இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் 44 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.694 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்த இந்த விழாவிற்காக மேடை முழுவதும் வண்ணமயமான பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் வருவதற்கு முன்பாக மேடையைச் சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அலங்காரப் பூக்களுக்குள் மறைந்திருந்த விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு, கண்ணன் என்ற பணியாளரைக் கடித்தது. வலியால் துடித்த அவர் உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் பங்கேற்கும் மேடையிலேயே பாம்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
