முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பியுமான ஜே.டி.எஸ். கட்சி உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் கடந்த நாள் ஆயுள் தண்டனையும், ரூ.11 லட்சம் அபராதமும் விதித்து கடும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக கூட்டணியில் ஹாசன் தொகுதியில் போட்டியிட இருந்த பிரஜ்வல் ரேவண்ணா மீது, நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், 47 வயதான வீட்டு வேலைக்கார பெண் ஒருவர், 2021-ம் ஆண்டு ஹாசனில் உள்ள பண்ணை வீடு மற்றும் பெங்களூருவில் உள்ள ரேவண்ணாவின் இல்லத்தில் அவர் மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். தொடர்ந்து மேலும் நான்கு பெண்களும் புகார்கள் கொடுத்தனர்.
விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரி பி.கே. சிங் தலைமையிலான குழு தீவிர நடவடிக்கை எடுத்தது. வீடியோ காட்சிகளில் பிரஜ்வலின் முகம் தெளிவாக காணப்படவில்லை என்பதால், பரிசோதனையில் போலீசார் பாரன்சிக் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினர்.
வீடியோவில் பதிவான குரல் மாதிரி, கைகள், பிறப்புறுப்புகள் மற்றும் உடலளவுகளைக் கொண்டு ஒப்பீடு செய்து, பிரஜ்வலின் உடலைப்பற்றி 10 ஒத்த அம்சங்களை கண்டறிந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆடைகளில் இருந்த DNA மாதிரிகளும் பிரஜ்வலுடையதுடன் பொருந்தியது. முக்கியமாக, வீடியோ பதிவான இடமாக பண்ணை வீடும் பெங்களூரு வீடும் உறுதிசெய்யப்பட்டது.
இந்த வழக்கில் 26 முக்கிய ஆதாரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது. இறுதியாக, பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதுடன், ஆயுள் தண்டனையும், ரூ.11 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
