அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, வோடேலா யஷஸ்வி கொட்டப்பள்ளி என்ற இந்திய இளைஞரை அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இவர் மீது, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, கடை திருட்டு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இவரை “குற்றவாளியான சட்டவிரோதக் குடியேறி” எனக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், விசாரணை முடியும் வரை அவர் காவலில் வைக்கப்படுவார் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்றும், அதன் பின்னர் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகள் நியூஜெர்சி நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
