19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி குறித்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் சிஎஸ்கே பயிற்சி முகாமில் கலந்து கொண்ட தோனி, வலைப்பயிற்சியில் மிகத் தீவிரமாக பேட்டிங் செய்து வருகிறார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன், வரவிருக்கும் சீசனில் தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அணியில் தோனியின் பங்களிப்பு எந்த வகையில் இருக்கும் என்பது குறித்து இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. அவர் ஒரு விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் களம் இறங்குவாரா அல்லது அணியின் தேவைக்கேற்ப ‘இம்பாக்ட் பிளேயராக’ பயன்படுத்தப்படுவாரா என்பது குறித்து அணி நிர்வாகம் அவருடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 40 வயதை கடந்த பின்னரும் தோனியின் உடற்தகுதி மற்றும் ஆட்டத்தின் மீதான ஆர்வம் குறையாமல் இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘தல’ தோனியை மீண்டும் முழு சீசனிலும் மஞ்சள் ஜெர்சியில் களத்தில் காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
