2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி பார்லிமென்டிலும், 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பையிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் பங்கு உறுதியாகியிருக்கிறது.
இத்தாக்குதல்களை அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் தான் திட்டமிட்டதாக, அந்நிறுவனத்தின் தளபதி மசூத் இலியாஸ் காஷ்மீரி ஒரு வீடியோவில் வெளிப்படையாக கூறியுள்ளார். இதன் மூலம், இந்த தாக்குதல்களில் எந்த தொடர்பும் இல்லை என இதுவரை பொய் கூறி வந்த பாகிஸ்தான் நாடு அம்பலமாகியுள்ளது.
பார்லிமென்ட் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்ததோடு, பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேரும், ஒரு தோட்டக்காரரும் உயிரிழந்தனர். மும்பை தாக்குதலில் 166 பேர் பலியாகி, 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் மசூத் அசாருக்கு தொடர்பு உள்ளதாக இந்தியா ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியும், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது.
ஆனால், “திஹார் சிறையில் இருந்து தப்பிய பிறகு, மசூத் அசார் பாகிஸ்தானின் பாலகோட்டை தளமாகக் கொண்டு டெல்லி, மும்பை தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்தினான்” என காஷ்மீரியின் ஒப்புதல், இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதோடு பாகிஸ்தானை கடும் சிக்கலில் சிக்கவைத்துள்ளது.
