கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த சவாலுக்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு வரத் தயாரா எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அங்குள்ள மருத்துவக் கல்லூரி ஆகியவை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே திமுக அரசு வேலையாக வைத்திருப்பதாக விமர்சித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்களை மறைத்துவிட்டு முதல்வர் பெருமை பேசுவது முறையல்ல என்றும், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் வாசித்தது சாதனைகளின் பட்டியல் அல்ல, அவர் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல் என்று சாடிய எடப்பாடி பழனிசாமி, திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை எத்தனை சதவீதம் நிறைவேற்றியது என்று மேடையில் வாசிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல ஆண்டுகளாகத் தான் விடுத்து வரும் இந்த ஓபன் சேலஞ்ச் இப்போதும் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியைப் பற்றி முதல்வர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தான் தயாராக இருப்பதாகவும், அதேபோல் திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்த தனது கேள்விகளுக்கு முதல்வர் மேடையில் பதில் சொல்லத் தயாரா என்றும் சவால் விடுத்துள்ளார்.
