பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இந்த பயணத்தின் போது, பொதுமக்களின் குறைகள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் மேற்கொண்ட இந்த பயணம், கட்சி ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், தனிப்பட்ட முறையில் ‘கிராமங்களை நோக்கி பயணம்’ என்ற பெயரில் தமிழகமெங்கும் புதிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் மூலம், தமிழக கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலை, பிரச்சினைகள், தேவைகள் ஆகியவற்றை அருகில் சென்று பார்வையிட்டு, தீர்வுகளை முன்வைப்பதே முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் துவக்கத் தேதியை ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.