வட இந்தியாவில் திருமண நிகழ்வுகளின்போது துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சட்டவிரோதப் பழக்கம் இன்னும் நீடித்துவரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தில் நேற்றிரவு (நவ. 23) அரங்கேறிய துயரச் சம்பவம் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மணமகன் ராகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் நடனமாடியுள்ளார்.

அப்போது அவர் சட்டவிரோதமாக வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். எதிர்பாராத விதமாக, துப்பாக்கிக் குண்டு திருமணத்திற்கு வந்திருந்த ராகுலின் நண்பரான சத்பால் மீனாவின் 6 வயது மகள் வீனாவின் தலையில் பாய்ந்தது. இரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுமியை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி வீனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மணமகன் ராகுலைக் கைது செய்தனர். அவரது திருமணம் நிறுத்தப்பட்டது. உயிரிழந்த சிறுமி வீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் சட்டவிரோதத் துப்பாக்கிச் சூட்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, தற்போது தலைமறைவாக உள்ள மணமகனின் நண்பர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொண்டாட்டமாகத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி, ஒரு சிறுமியின் மரணத்தில் முடிந்து, மணமகனின் கைது மற்றும் திருமணம் நிறுத்தப்படுவதற்கு வழிவகுத்த இச்சம்பவம், சட்டவிரோதத் துப்பாக்கிச் சூட்டுக் கொண்டாட்டங்களின் அபாயத்தையும், அதன் விளைவுகளையும் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.