டெல்லி: உறவு முறிவுகளைப் பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றுவது, குற்றவியல் நீதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு, பாலியல் வன்கொடுமை குற்றம் என்பது உண்மையான பாலியல் வன்முறை அல்லது சம்மதம் இல்லாத சூழல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்த வழக்கில், மனுதாரர் மற்றும் புகார்தாரர் இடையே மூன்று ஆண்டுகள் முழு சம்மதத்துடன் உறவு இருந்துள்ளது. அந்த உறவு திருமணத்தில் முடியாமல் போனதால், அந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த உடலுறவைப் பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தோல்வியுற்ற ஒவ்வொரு உறவுக்கும் குற்றவியல் சாயம் பூசும் போக்கு உண்மையான குற்றத்தின் தீவிரத்தைக் குறைக்கும் என்றும் கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.