மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள புகழ்பெற்ற எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், வெளிநோயாளி பிரிவில் சிகிச்சைக்காக வந்த 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கொல்கத்தா நகரில் தொடர்ச்சியாக நடைபெறும் இவ்வகை சம்பவங்கள், பொது மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.

சம்பவத்தன்று, தம்பதி ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தனர். அவர்களுடன் வந்திருந்த 13 வயது மகள், வெளிநோயாளர் பிரிவில் இருக்கையில் அமர்ந்து காத்திருந்த போது, ஒருவர் “இங்கு யாரும் அமரக்கூடாது” எனக் கூறி, சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் அந்த இடத்தில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பரிதாபமாக, அழுதவண்ணம் திரும்பி வந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை பகிர்ந்தபோது, அவர்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் பதிவு செய்தனர்.

தகவலின்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றஞ்சாட்டப்படும் நபர், மருத்துவமனையில் முன்பு வார்டு பாயாக பணியாற்றிய அமித் மாலிக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டிலும் மருத்துவமனையிலேயே ஒரு டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருந்தது. மேலும், ஜூன் மாதத்தில் சட்டக் கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் இன்னும் மறக்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது