பிரேசில் நாட்டில் உள்ள ஜோவோ பெஸ்ஸோவா மிருகக்காட்சி சாலையில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 19 வயது இளைஞர் ஒருவர், சிங்கப் பண்ணைக்குள் தடுப்புக் கம்பியை மீறி உள் நுழைந்ததால், அங்குள்ள சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்தப் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்தச் பயங்கரமான நிகழ்வு அரங்கேறியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேரில் பார்த்த சாட்சிகளின் கூற்றுப்படி, இளைஞர் திடீரென தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாகவும், அவரை நோக்கிச் சிங்கம் வரத் தொடங்கியவுடன், பயத்தில் உள்ளே இருந்த ஒரு மரத்தின் மீது ஏறித் தப்பிக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அந்த இளைஞர் பிடியை இழந்து கீழே விழுந்த சில வினாடிகளிலேயே சிங்கம் அவரைத் தாக்கியுள்ளது.
View this post on Instagram
சிங்கம் தாக்கியதில் இளைஞருக்கு ஏற்பட்ட காயங்கள் மிகவும் தீவிரமானதாக இருந்ததால், மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புக் குழுவினர் விரைந்து வந்து தலையிட்டும், அவரை காப்பாற்ற முடியவில்லை. அதிகாரிகள் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மிருகக்காட்சி சாலை பொதுமக்களுக்கான அனைத்துப் பார்வையையும் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது.
View this post on Instagram
இது போன்ற சம்பவம் எப்படி நிகழ்ந்தது மற்றும் மேலும் கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகள் தேவையா என்பது குறித்து ஆழமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மிருகக்காட்சி சாலை, நிலையான பாதுகாப்பு விதிகளுக்கு இணங்குவதாகவும், இந்தச் சோகமான விபத்து குறித்து உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
