மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது, ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் முகத்தில் பந்து பலமாகத் தாக்கியதில் நிலைதடுமாறி விழுந்த சம்பவம் மைதானத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

துபாய் சர்வதேச மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜன. 22) ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் 15-வது ஓவரை ஷமர் ஸ்பிரிங்கர் வீசினார். அப்போது களத்தில் இருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் எடுக்க முயன்று பாதி தூரம் ஓடிவந்தார். ஆனால், மறுமுனையில் இருந்த வீரர் ரன் எடுக்க மறுக்கவே, குர்பாஸ் மீண்டும் தனது இடத்திற்குத் திரும்பினார்.

 

அப்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் பீல்டர் வீசிய பந்து, விக்கெட்டைத் தாக்காமல் தரையில் பட்டு எகிறி நேரடியாக குர்பாஸின் முகத்தைத் தாக்கியது. பந்தின் வேகம் காரணமாக அவரது தலைக்கவசம் (Helmet) கழன்று காற்றில் பறந்தது. வலியால் துடித்த குர்பாஸ் உடனடியாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடுவர்கள் உடனடியாக மருத்துவக் குழுவினரை மைதானத்திற்குள் அழைத்தனர். சில நிமிடங்கள் சிகிச்சைக்குப் பிறகு, குர்பாஸுக்குப் பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் எழுந்து பேட்டிங் செய்தபோது ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

இப்போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் 73 ரன்கள் (58 பந்துகள், 8 பவுண்டரி, 1 சிக்ஸர்) விளாசினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொதப்பியதால், 20 ஓவர்களில் அந்த அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனாலும், 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

குர்பாஸ் காயமடைந்த அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.