செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவுக்கு திராவிட கழகத் தலைவர் திரு. கி. வீரமணி தலைமை தாங்கினார். விழாவில் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டுக்கான நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார். அத்துடன், விழாவை ஒட்டி தயாரிக்கப்பட்ட ஆவண நூலையும் வெளியிட்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிட இயக்கம் சார்ந்த தலைவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்த விழாவில் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, “முதல்வர் மு.க. ஸ்டாலின், சுயமரியாதை கொள்கையோடு அண்ணா கூறிய கடமை, கன்னியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றும் அடங்கிய கோட்பாட்டின் அடிப்படையில், கலைஞர் வழிநடத்திய பாதையில், மக்களுக்காக இடைவேளை இன்றி உழைத்து வரும் மின்சாரத்தையே போன்றவர்.

அந்த மின்சாரத்தை, சில புதிதாக தோன்றும் ‘மின்மினி பூச்சிகள்’ ஒன்றும் செய்ய முடியாது. அந்த பூச்சிகளை நம்பி, வடக்கு பகுதியில் இருந்து சிலர் — ‘சந்தர்ப்பம் கிடைக்குமா?’ என ஆழம் பார்க்க முயலுகிறார்கள். ஆனால், அவர்கள் எதையாவது முயற்சித்தால், பெரியாரின் மண் அவர்களை மூடிவிடும்,” என்றார். மேலும், “‘Chief Minister Sir’ என ஒரே கூச்சலிட்டால் ஆட்சி மாறிவிடுமா? இன்று (விஜய் குறித்து) அவருக்கு வெளியில் வரவே தைரியம் இல்லை. அவருடைய நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றமே கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்த ஆட்சிக்கு சவால் விடுகிறீர்களா? கருப்பு சட்டைக்காரரின் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரை, உங்கள் முயற்சிகள் வெற்றி பெறாது” என கூறினார் .