வடகிழக்கு மாநிலமான மிசோரம் மக்களின் வியக்கத்தக்க சாலை ஒழுக்கம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக இந்திய சாலைகள் என்றாலே இரைச்சல், போக்குவரத்து நெரிசல் மற்றும் முந்திச் செல்லுதல் போன்ற நினைவுகளே வரும். ஆனால், இந்த வீடியோவில் வாகனங்கள் அனைத்தும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் (Lanes), எந்த ஒரு தேவையற்ற சத்தமும் (No Honking) இன்றி மிகுந்த பொறுமையுடன் அணிவகுத்துச் செல்லும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, இந்தியாவிலேயே சிறந்த “சிவில் சென்ஸ்” கொண்ட மக்கள் இவர்கள்தான் என்கிற பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.

​இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த நெட்டிசன்கள், டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களின் டிராபிக் நெரிசலோடு ஒப்பிட்டு நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இதெல்லாம் பார்த்தா டெல்லி மக்களுக்கு ஏதோ ஏஐ (AI) வீடியோ மாதிரி தெரியும்” என ஜாலியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், “நாங்கள் முழுமையானவர்கள் இல்லை என்றாலும், எங்கள் மீது அன்பு காட்டும் மக்களுக்கு நன்றி” என மிகுந்த அடக்கத்துடன் இதற்குப் பதிலளித்துள்ளனர். ஒரு சிறிய மாநிலம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சாலை ஒழுக்கம் மற்றும் பொதுப் பொறுப்புணர்வு குறித்து ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது.