இன்றைய காலகட்டத்தில் நிலையான வேலையும், மாதம் தோறும் கையில் கிடைக்கும் சம்பளமுமே வாழ்க்கையின் பாதுகாப்பு எனப் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். ஆனால், டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு, இந்த பொதுவான சிந்தனையை முற்றிலுமாக உலுக்கியுள்ளது.

தான் பார்த்து வந்த நல்ல வேலையை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, கடந்த 60 நாட்களாக எந்தவொரு வருமானமும் இன்றி தான் கழித்த நாட்களையும், அப்போது தனக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவங்களையும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, “மாதாந்திர சம்பளம் என்பது ஒரு கடுமையான போதை மருந்து போன்றது, அதை கைவிடுவது மிகவும் கடினம்” என்று அவர் குறிப்பிட்டிருப்பது, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

​அடுத்த வேலை கைவசம் இல்லாத நிலையிலும், மன நிம்மதிக்காக வேலையை விட்ட பிறகு எதிர்கொள்ளும் மறைமுகமான மன அழுத்தங்கள் குறித்து கரண் விரிவாகப் பேசியுள்ளார். மீண்டும் பெற்றோரிடம் நிதியுதவி கேட்கும்போது ஏற்படும் குற்ற உணர்ச்சி, வங்கி இருப்பை அடிக்கடி சரிபார்க்கும் பதற்றம் மற்றும் ஒரு சிறிய பொருளை வாங்குவதற்கு முன்பும் பலமுறை யோசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் எதார்த்த நிலையை அவர் விவரித்துள்ளார்.

இந்த வைரல் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் கரியர் திருப்தி, மன ஆரோக்கியம் மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இடையே உள்ள சமநிலை குறித்து நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதப் புயல் கிளம்பியுள்ளது.