தமிழக காவல்துறையின் அடுத்த ‘தலைபதி’ யார் என்ற கேள்விக்கு விடை காணும் வகையில், வரும் மார்ச் 20-ஆம் தேதி டெல்லியில் மிக முக்கியமான தேர்வுக் குழு (UPSC) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தற்போதைய பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கட்ராமன் அந்தப் பதவிக்கான ரேஸில் இருப்பதாலும், உச்சநீதிமன்றம் “பொறுப்பு டிஜிபி” கலாச்சாரத்தைக் கடுமையாகச் சாடியதாலும், இந்தப் புதிய நியமன விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் பல்வேறு மாநிலங்களின் டிஜிபி நியமன வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தமிழகத்திற்கு ஒரு நிலையான டிஜிபியை உடனடியாக நியமிக்க யுபிஎஸ்சி (UPSC) இப்போது போர்க்கால அடிப்படையில் களமிறங்கியுள்ளது.

​இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு, தகுதியான அதிகாரிகளின் பட்டியலை இறுதி செய்யவுள்ளனர். சீனியாரிட்டி அடிப்படையில் சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தின் அடுத்த நிரந்தர டிஜிபி யார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும். இந்த நியமனம் தமிழக அரசியலிலும், காவல்துறையிலும் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், ஒட்டுமொத்த கோட்டையும் இப்போது டெல்லியை நோக்கியே காத்துக்கொண்டிருக்கிறது!