தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே தேர்தல் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வரும் மார்ச் 15 அல்லது 16-ம் தேதிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகளை வெளியிடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், வேட்பாளர்களை அதிரவைக்கும் புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ₹40 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்தால், அது ஊழல் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும், உடனடியாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுமட்டுமின்றி, கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க மற்றுமொரு அதிரடித் திட்டத்தையும் தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. வேட்பாளர்களின் வங்கிக் கணக்குகள் மட்டுமின்றி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளும் இனி தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்கள் நடந்தால், வருமான வரித்துறை மூலம் கடும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த ‘ஸ்டிரிக்ட்’ நடவடிக்கைகள், அரசியல் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
