தமிழக அரசியல் களம் தேர்தல் நெருக்கத்தில் அனல் பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் பேசிய அவர், திமுக கூட்டணியில் விசிக-வுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனச் சாடினார்.
“சமீபத்தில் தான் கூட்டணிக்கு வந்த தேமுதிக-வுக்குக் கூட மாநிலங்களவை சீட் வழங்கப்படுகிறது, ஆனால் இத்தனை ஆண்டுகளாகக் கூட்டணியில் இருக்கும் எங்களது திருமா அண்ணன் பாவம்.. கடந்த 4 ஆண்டுகளாக எதையும் கேட்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்று நக்கலாகக் குறிப்பிட்டார்.
“இதைவிட ஒரு அவமானம் வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், திருமாவளவன் இன்னும் எவ்வளவு காலம்தான் திமுகவின் நிழலில் தங்கி இருப்பார் என்றும் சாடினார். தவெக தலைவர் விஜய் களத்தில் இறங்கும்போது மிகப்பெரிய மாற்றம் வரும் என்றும், அப்போது இதுபோன்ற ‘முடக்கி வைக்கப்பட்ட’ அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகப் பேசினார்.
விசிக-வில் இருந்து வெளியேறி தவெக-வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, தனது முன்னாள் குருவான திருமாவளவனையே இப்படி பகிரங்கமாகத் தாக்கிப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
