தமிழக அரசியல் களம் தேர்தல் நெருக்கத்தில் அனல் பறந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபகாலமாக தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் பேசி வரும் கருத்துக்கள் குறித்துப் பேசிய திருமாவளவன், “அரசியல் என்பது ஒரு நீண்ட காலப் பயணம், அது வெறும் சினிமா வசனங்களைப் பேசுவதல்ல” என்று சாடினார்.
தவெக தலைவர் விஜய் இன்னும் அரசியல் ரீதியாக முதிர்ச்சியடையவில்லை (Maturity) என்று குறிப்பிட்ட அவர், கொள்கை ரீதியாக விஜய்யிடம் எந்த தெளிவும் இல்லை என்றும் விமர்சித்தார்.
“மக்கள் பிரச்சனைகளுக்காகக் களத்தில் நின்று போராடினால் மட்டுமே ஒரு தலைவராக உருவெடுக்க முடியும், அதைத் விடுத்து மாநாடுகளிலும் மேடைகளிலும் கைதட்டல் பெறுவது மட்டும் அரசியல் ஆகாது” என்று திருமாவளவன் ஆவேசமாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, தவெக தரப்பில் இருந்து விசிக-வை நோக்கி வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திருமாவளவனின் இந்தப் பேச்சு அமைந்துள்ளதால், தவெக – விசிக இடையே இப்போது நேரடி மோதல் வெடித்துள்ளது.
