நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

“தம்மை ‘அப்பா’ என்று அழைத்துக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், பாலியல் இச்சைக்குப் பலியான அடுத்த குழந்தை இது” என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே ஒரு குழந்தையைத் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்யும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் வந்துவிட்டது என்றால், சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் சந்தி சிரிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என விளம்பர விழாக்கள் நடத்தி, பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் காயங்களை மூடி மறைக்க முடியாது என்றும், முதல்வர் அரசியல்வாதியாகப் பார்க்காமல் ஒரு தந்தையாக யோசித்துப் பார்த்தால் இந்த ‘திராவிட மாடல்’ அரசை மன்னிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் மன அழுத்தத்திலும் தவிப்பதுதான் இந்த ‘நல்லாட்சி’யின் லட்சணமா எனச் சீறியுள்ள நயினார் நாகேந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமி விரைவில் குணமடைய அனைவரும் உறுதுணையாக இருப்போம் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.