தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்ட மேடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ‘மாம்பழம்’ சின்னத்தைப் பயன்படுத்தியது சட்டவிரோதமானது என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த மேடையின் பின்னணியில் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பாமகவின் ‘மாம்பழம்’ சின்னமும் அச்சிடப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான ‘மாம்பழம்’, தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு நிலுவையில் உள்ள சூழலில், பிரதமர் பங்கேற்கும் மேடையில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பாமகவுக்குள் நிலவும் தலைமைப் போட்டியால் சின்னம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் உள்ள ஒரு பிரிவினர் (அன்புமணி தரப்பு), தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத சின்னத்தை காட்சிப்படுத்துவது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள சின்னத்தை பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இச்செயல் பிரதமரின் பதவிக்கும், ஜனநாயக மரபுகளுக்கும் இழைக்கப்படும் அவமரியாதையாகும்.
“அதிகார பலத்தைப் பயன்படுத்திச் சின்னத்தை அபகரிக்க நினைக்கும் இச்செயலைத் தேர்தல் ஆணையம் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸின் இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “மாம்பழம் சின்னம் தொடர்பான கேள்விகளைத் தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் சுருக்கமாகப் பதிலளித்தார்.
மேலும் பிரதமர் பங்கேற்கும் மேடையிலேயே சின்னம் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
