நெல்லை அருகே குடும்பத் தகராறில் 90 வயது மாமியாரை மருமகளே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் அடுத்த கம்மாளன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற மூதாட்டி, தனது மகன் மற்றும் கணவர் மறைவுக்குப் பிறகு, மருமகள் வசந்தா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வெள்ளையம்மாள் தனது வீட்டில் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த மானூர் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் மருமகள் வசந்தாவைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த வசந்தா தனது மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வசந்தாவைக் கைது செய்தனர். குடும்பப் பிரச்சினையில் முதியவர் ஒருவர் சொந்த மருமகளாலேயே படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.