திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ராமலெட்சுமி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக ஒரு வாலிபரைக் காதலித்து வந்த நிலையில், இந்த காதலுக்கு அவரது தம்பி முத்துக் கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார். நேற்றும் ராமலெட்சுமி தனது காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த தம்பி முத்துக் கிருஷ்ணன், அக்காவிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சண்டை முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற முத்துக் கிருஷ்ணன், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அக்கா ராமலெட்சுமியை பெற்றோர் கண்முன்னே சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார். இரத்த வெள்ளத்தில் துடித்த அந்தப் பெண்ணை அவரது பெற்றோர் அலறியடித்து மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரக் கொலை குறித்து ராமலெட்சுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து கொலையாளி தம்பி முத்துக் கிருஷ்ணனை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் உடன் பிறந்த தம்பியே அக்காவை வெட்டிக் கொன்ற இந்த ஆணவப் படுகொலைச் சம்பவம் நெல்லைப் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
