நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த அக்காவையே தம்பி அறிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுத்தமல்லி மேலக்கரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ராமலட்சுமி (தனியார் நிறுவன ஊழியர்), கடந்த சில மாதங்களாக ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதற்கு அவரது தம்பியான முத்துகிருஷ்ணன் (ஹோட்டல் தொழிலாளி) கடும் எதிர்ப்பு தெரிவித்து, அக்காவை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டிற்குள் இருவருக்கும் இடையே மீண்டும் காதல் விவகாரம் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற முத்துகிருஷ்ணன், வீட்டில் இருந்த அறிவாளை எடுத்து அக்கா ராமலட்சுமியை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலட்சுமியை பெற்றோர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ராமலட்சுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி தம்பி முத்துகிருஷ்ணனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.