மனைவி என்னைக் கொன்று டிரம்மில் அடைத்துவிடுவார் என்று பயமாக இருக்கிறது” எனக் கூறி, கணவர் ஒருவரே தன் மனைவியை அவரது காதலனான சொந்த மருமகனுக்கே திருமணம் செய்து வைத்த அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடந்துள்ளது.

அதில் பங்கஜ் என்பவருக்கும் பூஜா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பூஜாவுக்குத் தனது கணவரின் உறவினரானா மருமகன் சஞ்சீவ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பங்கஜ் கூறுகையில், “என் மனைவி தினமும் இரவு உணவில் எனக்கும் குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, இரவோடு இரவாக மருமகன் சஞ்சீவைச் சந்தித்து வந்தார். இதைக் கண்டித்தபோது வீட்டில் தினமும் தகராறு ஏற்பட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.

மீரட்டில் நடந்த பிரபல ‘முஸ்கன் கொலை வழக்கை’ (உடலை வெட்டி டிரம்மில் அடைத்த சம்பவம்) சுட்டிக்காட்டிய பங்கஜ், தனது மனைவியும் தன்னைக் கொன்று நீல நிற டிரம்மில் அடைத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டார். தனது உயிருக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பயந்து, சமூக அவமானத்தைத் தவிர்க்க ஒரு அதிரடி முடிவை அவர் எடுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக டோகாட் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் கூடினர். போலீசார் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்ப முயன்றனர். ஆனால், பங்கஜ் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார்.

காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன், அங்கேயே மாலைகளை வரவழைத்து, தனது முன்னிலையிலேயே மனைவிக்கும் மருமகனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, அக்னி சாட்சியாக ஏழு சுற்றுகள் சுற்றித் திருமணத்தை முடித்தனர். “இனி என் மனைவிக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை; என் சுய விருப்பத்தின் பேரில் இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்” எனப் பங்கஜ் போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதியினர் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு நகரத்திற்குச் சென்றனர். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பங்கஜ், “என் மனைவி இனி எங்கும் முகம் காட்ட முடியாதபடி செய்துவிட்டார். இந்த ஊரில் எனக்கு இனி எதுவுமில்லை” எனக் கூறி, தனது இரண்டு குழந்தைகளுடன் கிராமத்தை விட்டு நிரந்தரமாக வெளியேற முடிவு செய்துள்ளார்.

கிராம மக்களிடையே இந்தப் பேச்சு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், ஏற்கனவே பலமுறை பஞ்சாயத்து நடத்தியும் இந்த காதல் ஜோடி கேட்காததால், கணவரே இந்த வினோதமான முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.