மகாராஷ்டிர மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட 1.1 லட்சம் ஆசிரியர்கள், தங்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள 2027 செப்டம்பர் மாதத்திற்குள் ‘ஆசிரியர் தகுதித் தேர்வில்’ (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2025 செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பின்படி, பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் (TET) தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தில் சுமார் 90 சதவீதத்தினர், அதாவது 4.4 லட்சம் ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1.1 லட்சம் பேர் 50 வயதைக் கடந்தவர்கள். ஓய்வு பெற இன்னும் 15 ஆண்டுகளே உள்ள நிலையில், இந்த வயதில் தகுதித் தேர்வை எதிர்கொள்வது அவர்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஆசிரியர்களின் நிலை பின்வருமாறு:

தொடக்கப் பள்ளி (வகுப்பு 1-5): மொத்தம் உள்ள 3.06 லட்சம் ஆசிரியர்களில், வெறும் 22,975 பேர் (8%) மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 92 சதவீதத்தினர் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்.

நடுநிலைப் பள்ளி (வகுப்பு 6-8): 1.89 லட்சம் ஆசிரியர்களில் 86 சதவீதத்தினர் இன்னும் இத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

பழைய ஆசிரியர்கள்: 2011-ஆம் ஆண்டு தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே பணியில் சேர்ந்த 2.5 லட்சம் ஆசிரியர்களும் தற்போது இந்தத் தேர்வை எழுத வேண்டியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் (செப்டம்பர் 2027-க்குள்) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்குக் ‘கட்டாய ஓய்வு’ அளிக்கப்படும். ஏற்கனவே பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் சூழலில், இந்த உத்தரவு கல்வித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

ஆசிரியர்களின் பதற்றத்தைப் போக்கவும், அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும் மகாராஷ்டிர மாநிலத் தேர்வுக் குழு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட டிஇடி தேர்வு, இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்.

சமீபத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகளில், முந்தைய ஆண்டுகளை விடக் கூடுதலாக 11.28% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.