கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி சுமத்தும் ஆதாரமற்ற வரதட்சணை கொடுமை புகார்கள் ‘மனரீதியான கொடுமை எனக் கருதி, பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து வழங்கி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2017-ஆம் ஆண்டு மனைவி தனது கணவர், மாமியார் மற்றும் மைத்துனர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498A-இன் கீழ் வரதட்சணை கொடுமைப் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த கீழ நீதிமன்றம், புகாரில் ஆதாரமில்லை எனக் கூறி கணவர் குடும்பத்தாரை விடுவித்தது.
இதனை எதிர்த்து அந்தப் பெண் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஆனால், அனைத்து இடங்களிலும் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
முன்னதாக, மனைவி கொடுத்த பொய் புகாரால் தனக்கு மன உழைச்சல் ஏற்பட்டதாகக் கூறி, கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், குடும்ப நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து கணவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கே. அகர்வால் மற்றும் அரவிந்த் குமார் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான புகார்களைச் சுமத்துவது திருமண உறவைச் சிதைக்கும் செயலாகும்.
கீழமை நீதிமன்றம் கணவர் குடும்பத்தாரை விடுவித்த பிறகும், விடாமல் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவர்களைத் தண்டிக்க முயல்வது ‘மனரீதியான கொடுமை’ என்ற பிரிவின் கீழ் வரும்.
இத்தகைய சூழலில் கணவர் தனது மனைவியுடன் இணைந்து வாழ முடியாது என்பதால், அவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது என்றனர்.
திருமண உறவுகளில் பொய்ப் புகார்கள் அதிகரித்து வரும் சூழலில், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் ஒரு குடும்பத்தின் நிம்மதியைக் குலைப்பது விவாகரத்து பெறுவதற்கான தகுந்த காரணம் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
