உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில், உரிய தகுதியற்ற நபர்கள் மேற்கொண்ட சிசேரியன் அறுவை சிகிச்சையால் 28 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் நகர் புக்கியா கிராமத்தில் ‘நவஜீவன்’ என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி, பிரியங்கா (28) என்ற பெண் பிரசவத்திற்காக அங்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அந்த சிகிச்சையைச் செய்தவர்கள் மருத்துவர்கள் அல்ல. யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும், சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12-ஆம் வகுப்பு மாணவனும் இணைந்தே அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரியங்காவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும், தகுதியற்ற நபர்கள் சிகிச்சை செய்ததால் அவருக்குத் தொடர்ந்து அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டது. நிலைமை மோசமடையவே, அவர் லக்னோவில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன. அதாவது இந்த நவஜீவன் கிளினிக் கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித அரசு அனுமதியோ அல்லது முறையான பதிவோ இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது.

பி.ஏ. பட்டதாரியான யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வார்டு பாய் ஆவார். அவரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, யோகேஷ் துணிச்சலாக இத்தகைய பெரிய அறுவை சிகிச்சைகளைச் செய்து வந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யோகேஷ் மற்றும் மாணவன் சுப்ளம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த மருத்துவமனையை நடத்தி வந்த ரூபி என்ற பெண் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் போலி மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தகுதியற்ற நபர்கள் உயிரோடு விளையாடும் இத்தகைய சட்டவிரோத மருத்துவமனைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.