வடமேற்கு டெல்லியின் திரிநகர் பகுதியில், எலக்ட்ரிக் மெத்தையில் (Electric Bed) உறங்கிக் கொண்டிருந்த 45 வயது நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் மெத்தை மூலம் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் தீரஜ் கௌசிக் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சொந்தமாகத் தொழில் செய்து வந்தவர். சம்பவத்தன்று தீரஜ் கௌசிக் தனது அறையில் இருந்த எலக்ட்ரிக் மெத்தையில் சடலமாகக் கிடந்துள்ளார். இது குறித்து அவரது சகோதரர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த மெத்தையில் மின்சார ஒயர்கள் மற்றும் ஒரு மின்சார சாக்கெட் (Electric Socket) இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
உயிரிழந்த தீரஜ் கௌசிக் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த நாளன்று அவர் காலை முதலே மது அருந்தியிருந்ததாக அவரது தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். மது போதையில் மெத்தையில் படுத்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக மெத்தையில் பாய்ந்த மின்சாரம் அவரைத் தாக்கியுள்ளது.
தீரஜ் கௌசிக்கிற்கு கடந்த 2003-ஆம் ஆண்டு திருமணமாகி, பின்னர் விவாகரத்து பெற்றுள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்தச் சம்பவத்தில் தற்போது வரை சந்தேகிக்கும்படியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனப் போலீசார் கூறியுள்ளனர்.
தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலக்ட்ரிக் மெத்தைகள் மற்றும் மின்சார சாதனங்களைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என இந்தச் சம்பவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
