உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில், திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் ஒருவர் அவரது கொழுந்தனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, கொலையாளி தனது அண்ணிக்குத் தங்கை முறை வரும் பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். இது தொடர்பாகத் தனது குடும்பத்தினரிடமும், அண்ணியிடமும் பலமுறை விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் பெண் இவரைத் திருமணம் செய்யத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், தனது திருமணத்திற்கு அண்ணிதான் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதி அவர் மீது வன்மம் கொண்டுள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் மற்ற உறுப்பினர்கள் வேலையாக இருந்த நேரத்தில், அந்த வாலிபர் கூர்மையான ஆயுதத்துடன் அண்ணியின் அறைக்குள் நுழைந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் அண்ணியின் கழுத்தை அறுத்தார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

அண்ணியைக் கொலை செய்த கையோடு, அதே ஆயுதத்தைக் கொண்டு அந்த வாலிபர் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிரிழந்த பெண்ணிற்குத் திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆகிறது. திருமணக் கொண்டாட்டங்கள் முடிவதற்குள்ளேயே அந்தப் பெண் கொல்லப்பட்டிருப்பது அக்குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த வாலிபர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து வந்த மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தடயங்களைச் சேகரித்தனர். திருமண மறுப்பு மற்றும் ஒருதலைப்பட்சமான காதல்தான் இந்தத் தாக்குதலுக்கு முதன்மையான காரணமாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா அல்லது அந்த வாலிபர் ஆத்திரத்தில் தனியாகவே இந்த முடிவை எடுத்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.