நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்குகிறது. அதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு கல்வித்துறையின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவது குறித்து நேற்று முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிலும் 24 லட்சம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெலுங்கானா கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். அதே சமயம் இதற்காக 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மொழி பாட புத்தகங்கள் இரண்டு ஜோடி பள்ளி சீருடைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.