பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) திட்டத்தின் கீழ், 8ஆம் வகுப்பு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடைநிற்றலைத் தவிர்த்து உயர்நிலைப் பள்ளி கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில், தேசிய அளவில் தேர்வு நடத்தி தகுதியானவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 8ஆம் வகுப்பில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும். 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 வீதம், 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இதனை பெற 7ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 50% போதுமானது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கேந்திர வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தகுதியற்றவர்கள். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்தை மீறக் கூடாது.

இதற்கு விண்ணப்பங்கள் டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கியுள்ளன. டிசம்பர் 20ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த உதவித்தொகைக்கான தேர்வு ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.