தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைவர் விஜய், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்காக 2 முதல் 3 அரசியல் கட்சிகள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், வரும் ஜனவரி மாதத்தில் கூட்டணியின் இறுதி வடிவம் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். பொதுவான எதிரியான திமுகவை வீழ்த்த பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்குள் வர விருப்பம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வரிசையில் விஜய்யும் இடம்பெறலாம் என்றும் வைகைச்செல்வன் குறிப்பிட்டார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் எதிர்பார்க்கும் வகையில் பெரும் கூட்டணி அமையும் என பேசியிருந்தார். இதையடுத்து, கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே, தவெக கொடியைக் குறிப்பிட்டு, “கொடி பறக்குது… பிள்ளையார் சுழி போட்டாச்சு” என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, “விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என்ற தீர்மானத்தை தவெக கட்சி நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், விஜய் தரப்பில் இருந்து அதிமுகவை நேரடியாக கடுமையாக விமர்சிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் பாஜக பெயரை குறிப்பிடாமல், “மத்திய அரசு” என்ற பொதுவான சொல்லாடலை மட்டுமே பயன்படுத்தி விமர்சனம் முன்வைத்தார்.
இதனால், ஜனவரி மாதத்திற்குப் பிறகு விஜய் அதிமுக கூட்டணிக்குள் வருவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழுவிலும் விஜய் குறித்து எந்தத் தலைவரும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. கடைசி நேரத்தில் வேறு எந்தக் கட்சியுடனும் விஜய் கூட்டணி அமைக்கவில்லை என்றால், அவர் அதிமுக பக்கம் சாய வாய்ப்பு உள்ளது என எடப்பாடி பழனிசாமி கருதி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுக கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்று பாஜக தரப்பில் இருந்து எந்த கட்டாயமும் இல்லை என வைகைச்செல்வன் தெரிவித்தார். வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், இருவரையும் கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பாஜக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விரைவில் என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இந்த இருவரும் விஜய்யுடன் கூட்டணி அமைத்தால், அது என்டிஏக்கு பெரிய அரசியல் சிக்கலை உருவாக்கக்கூடும். இதனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையின் போது முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
